April 10, 2011

மகிழ்வான வாழ்க்கை ...



ஒப்பிடுதல்

ஒப்பிடுதல் என்பது மனித வாழ்வுடன் சேர்த்து பின்னப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். சமூகத்தில் பிறக்காமல் காட்டில் பிறந்து தனியாக வாழும் மனிதனும் ஒப்பிடாமல் வாழ மாட்டான். காட்டில் ஒரு இடத்திற்கு செல்ல பல வழிகள் இருந்தால், அதில் ஒரு வழியை அந்த சமூகத்தை பாரா மனிதனும் பிற வழிகளுடன் ஒப்பிட்டு தான் தேர்ந்தெடுப்பான். சாய்ஸில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வரும் போது, ஒப்பிடுதல் என்பது அதனுடன் சேர்ந்தே வருகின்றது.

ஒரே பொருள் பக்கத்து பக்கத்து கடைகளில் இருபது சதவீத விலை வித்தியாசத்தில் விற்கப்படுகின்றது என்றால், அதை நாம் ஒப்பிட்டு நமது தேர்வினை முடிவு செய்வோம். ஒரு விதத்தில் அறிவு என்பதே இது தான். முடிவில்லாமல் சாய்ஸ்கள் நம் வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கின்றன. சாய்ஸ்களின் கனம் மாறுபடுகிறது. சில சாய்ஸ்கள் நமது வாழ்க்கை ஓட்டத்தை பெருமளவில் திருப்புகின்றன, பெரும்பாலானவை மிக பெரிய மாற்றத்தை கொணர்வதில்லை. எவ்வாறு இருப்பினும் ஒவ்வொரு மணி நேரத்திலும் இடைவிடாது பல சாய்ஸ்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒப்பிடுதல் தான் நாம் எதிர்கொள்ளும் சாய்ஸில் ஒன்றை தேர்ந்தெடுக்க நமக்கு உதவும் காரணி. ஒப்பிடுதல் இல்லாமல் மனித வாழ்க்கை என்பதே இல்லை.

மகிழ்ச்சி

"நீண்ட மகிழ்வான" வாழ்க்கை, இதுவே வாழ்க்கையின் பொருள்/குறிக்கோள் என்று நான் கருதுகிறேன். "நீண்ட மகிழ்வான", என்பதில் உள்ள முதல் சொல் "நீண்ட". மனிதன் பணம் ஈட்ட துடிப்பது இதனாலே. பணம் வாழ்க்கையை நீடிக்க உதவும் உறைவிடம், உடை, உணவு, மருத்துவம் மற்றும் பல வசதிகள் பெற உதவுகின்றது. பணம் என்பது நமது உற்பத்தி திறனை பிற்காலத்திற்கு சேமித்து வைக்க உதவும் ஒரு கருவி. பின்னாளில் நம் உற்பத்தி திறன் குறையலாம், நமது உடல், மனதின் வலிமை குன்றலாம். இந்த பயத்திலிருந்து தன்னை விடுவிக்க தன் உற்பத்தி திறனை இப்போதே நிறைய சேமித்து வைக்க மனிதன் விரும்புகிறான். வலிமை குன்றும் காலத்தில் இந்த சேமித்த பணம் தனது வாழ்வை, நல் உடல்நலத்தினை நீடிக்க உதவ வாய்ப்பு அதிகம் என்பது இங்குள்ள கருத்து.

"நீண்ட மகிழ்வான", என்பதில் உள்ள இரண்டாவது சொல் "மகிழ்ச்சி". மகிழ்ச்சி என்பது மனதின் ஒரு நிலை. நீண்ட வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது ஓரளவு மனதுக்கு மகிழ்ச்சியைக் கொணர்ந்தாலும், அது மட்டும் மனதின் மகிழ்ச்சிக்கு போதுமானதாக இருப்பதில்லை. ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் பொருள் இன்னொருவருக்கு மகிழ்ச்சி தருவதில்லை, ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு இன்னொருவருக்கு மகிழ்ச்சி தருவதில்லை. அதனால் இது மனதின் பார்வையை பொறுத்தது என்பது என் கருத்து. பார்வையை மாற்றுவதன் மூலம் மனதின் நிலையை மாற்ற இயலும். பார்வையை மாற்றுவது எளிதல்ல. நாம் சிறுவயதில் இருந்து பார்த்த சம்பவங்கள், அனுபவங்கள், நாம் நம்பும் கருத்துகள், நமது பிரிஜுடிஸ்கள், நமது தத்துவங்கள், நமது சிந்தனை என்ற பல நமது பார்வையை தீர்மானிக்கின்றது.

No comments:

Post a Comment